

தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி காரில் சென்ற எட்டு பொறியியல் மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி சென்ற 8 பொறியியல் மாணவர்கள் பயணித்த கார் ஒன்று, திருச்சூர் கடலோரப் பகுதியான கைப்பமங்கலம்-பனம்பிகுன்னுவில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில், காரில் பயணம் செய்த எட்டு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்றுவரும் எட்டு மாணவர்கள் நேற்று (04.09.2026) காரில் கேரளம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில்,
இரவு 11.50 மணியளவில் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் கிராமம், பனம்பிக்குன்னு என்ற இடத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் எட்டு மாணவர்களும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.
உயிரிழந்த எட்டு மாணவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவர, அனைத்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளையும் விரைவுபடுத்தத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இப்பணிகளை ஒருங்கிணைக்க திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட 5 அரசு அலுவலர்கள் உடனடியாக திருச்சூருக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து,
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதுடன், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன்பின் திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இச்சம்பவத்தால் துயருறும் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செயல்முறையை விரைவுபடுத்தி தங்களது சொந்த ஆம்புலன்ஸ் மூலமாக உயிரிழந்த மாணவர்களின் உடல்களை தமிழ்நாட்டிலுள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிய கேரளம் மாநில அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.