சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் பங்கேற்பு

விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் பங்கேற்பு
Published on

தென்தாமரைகுளம்:

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது.

விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவியுடை அணிந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பூஜித குரு. சாமி தலைமை தாங்கினார். பூஜிதகுரு.ராஜசேகரன், பூஜிதகுரு.தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.

திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும்போது திரளான அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைகிறது.

தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாமிதோப்பிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. காவல்துறை சார்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com