காவிரி நீர் பங்கீடு வழக்கு: மேலாண்மை வாரியத்தை அணுக தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி கர்நாடக அரசு ஏற்கனவே தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
Cauvery water-Supreme Court
Published on

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய விகிதாச்சாரப் பங்கு நீர் முழுமையாக வந்து சேரவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் (CWMA) முறையிட்டுத் தீர்வு காணுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் மனு

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, தினசரி 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 4.536 டி.எம்.சி நீரை கர்நாடகா உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உத்தரவிட்டபடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றும், இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியது. மேலும், திமுக விவசாயி அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவிலும், பிலிகுண்டுலு எல்லையில் நீர் வரத்தை தினசரி அடிப்படையில் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி கர்நாடக அரசு ஏற்கனவே தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், திங்கள்கிழமை காலை நிலவரப்படி வாரியம் உத்தரவிட்ட நீர் வந்து சேர்ந்திருந்தாலும், அது தற்காலிகமானது என்றும், பருவமழை மற்றும் ஒட்டுமொத்தப் பங்கை ஒப்பீட்டளவில் கணக்கிடும்போது தமிழகத்திற்குச் சேர வேண்டிய விகிதாச்சார பங்கு நீர் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர் பங்கீட்டு அளவீடு மற்றும் பற்றாக்குறை குறித்த முறையீடுகளை காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முன்னிலையிலேயே முன்வைத்து நிவாரணம் பெறுமாறு தமிழகத்திற்கு அறிவுறுத்தினர். கர்நாடகா அரசு வெளியிடும் நீரின் அளவு மற்றும் பிலிகுண்டுலு எல்லையை அடையும் நீரின் அளவீடுகள் தொடர்பான புதிய நிலை அறிக்கையை ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com