

விபத்தில் பள்ளி பஸ் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள அமிர்தா வித்யாலாயா பள்ளியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்களை தினமும் பஸ்களில் அழைத்து வருகிறார்கள். பின்னர் பள்ளி முடிந்த பின்னர் மாணவர்களை அவர்களின் வீடுகளுக்கு பள்ளி பஸ் மூலம் சென்று விடுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மாணவர்களை அழைத்து செல்வதற்காக பள்ளி பஸ் வந்தது. இந்த பஸ்சில் 15 மாணவர்கள் இருந்தனர். பஸ் கோவை-பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் அடுத்த எல்.ஐ.சி. காலனி அருகே வரும்போது டிரைவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பஸ் தாறுமாறாக சென்றது. பஸ்சில் இருந்து மாணவர்கள் அலறினர். டிரைவர் கட்டுப்பாடு இல்லாமல் சிறிது தூரம் ஓடிய பஸ் சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் பள்ளி பஸ் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிர்ஷ்டவமாக பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் பள்ளி பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பஸ் மோதியதில் கடையின் முன்பகுதியும் சேதமடைந்தது.
இதனை தொடர்ந்து விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி பஸ் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.