

கேமராக்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையின் கீழ் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் முதல் காவேரிப்பட்டணம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 25 இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்து கேமராக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, போக்குவரத்து விதிமீறல்களுக்கு தானியங்கி முறையில் இ-செலான் அபராதம் விதிக்கும் திட்டம் அமலுக்கு வர உள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் என்.எச்.44 தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் தொடங்கி சூளகிரி, சானமாவு காப்புக்காடு, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் வழியாக செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் பெரு நகரங்களில் செயல்படுத்தப் படுவதைப் போன்று, விதி மீறும் வாகனங்களின் பதிவு எண்ணை அதிநவீன கேமராக்கள் மூலம் கண்டறிந்து தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக ஓசூர் முதல் காவேரிப்பட்டணம் வரை 25 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கேமராக்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையின் கீழ் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன.
இப்பணிகள் விரைவில் நிறைவடைந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் தானியங்கி அபராதம் விதிக்கும் திட்டம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதன் மூலம் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், எதிர்திசையில் பயணித்தல், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் செல்லுதல், வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், ஆபத்தான முறையில் முந்திச் செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை கேமராக்கள் மூலம் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஆன்லைன் வழியாக இ-செலான் அபராதம் விதிக்க முடியும். இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்து, சாலை விபத்துகளும் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.