விளையாட்டுதான் என்னுடைய சாதி, மதம், மொழி, குடும்பம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

100 ஆண்டுகளில் தமிழர்கள் யாரும் ஒலிம்பிக் பதக்கம் வாங்கவில்லை. இதை மாற்ற '8 to 18' என்ற புதிய திட்டத்தை கொண்டு வரப்போகிறோம்
Aadhav Arjuna
Published on

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது விளையாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளையும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவை போல் தனித்து நின்று வெற்றி

"2016-ல் புரட்சித்தலைவி ஜெயலலிதா தனித்து நின்று வெற்றி பெற்றார். அதேபோல் 2026-ல் 41 எதிர்கட்சிகளை எதிர்த்து நின்று முதல்வர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்" என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். "மக்கள் துணையுடன், இளைஞர்கள் துணையுடன், தமிழக மக்கள் துணையுடன் ஆட்சியை பிடித்துள்ளார் முதல்வர் விஜய்.

3 வருடத்தில் கட்சி ஆரம்பித்து வெற்றி பெற முடியுமா, பூத் இருக்கா, ஏஜெண்ட் இருக்கா என கேட்டார்கள். ஆனால் 41 எதிர்கட்சிகளை எதிர்த்து இந்த வெற்றி சாத்தியமானது" என அவர் பேசினார்.

அண்ணாவின் கனவு நிறைவேறியது

"அண்ணாவை போல் ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார் முதல்வர் விஜய். அண்ணா கூறியதை போல இளைஞர்களுக்கு வேகமும் அதிகம், விவேகமும் அதிகம்" என ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.

"சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இல்லாத அண்ணா கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. இன்று சட்டப்பேரவையில் இருப்பவர்கள் பண்ணையாரின் பிள்ளைகள் அல்ல, மன்னர் ஆட்சியின் பிள்ளைகள் அல்ல. அம்பேத்கர் கண்ட கனவு இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறி உள்ளது.

21 தலித் உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர்" என்றார்."1 ரூபாய் காசு செலவு செய்யாமல் இங்குள்ள தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்" என்றும் அவர் பெருமையுடன் கூறினார்.

விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் - புதிய திட்டங்கள்

விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, "விளையாட்டுதான் என்னுடைய சாதி, மதம், மொழி, குடும்பம்" என்றார். புரட்சித்தலைவி அம்மாவின் Sports Development Authority திட்டத்தின் கீழ் திருச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவர்களில் ஒருவராக தான் இருந்ததாகவும், நேரு ஸ்டேடியத்தில் மாநிலத்திற்காக விளையாடிய தேசிய அளவிலான பாஸ்கெட்பால் வீரர் என்றும் தெரிவித்தார்.

"இங்கேயே 3 பாஸ்கெட்பால் வீரர்கள் உள்ளனர். நிதியமைச்சர் மரிய வில்சன், முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, சபாநாயகர் ஜெ.எஸ்.டி பிரபாகர் உட்பட பலரும் விளையாட்டு பின்னணியில் இருந்து வந்தவர்கள்" என கூறினார்.

"100 ஆண்டுகளில் தமிழர்கள் யாரும் ஒலிம்பிக் பதக்கம் வாங்கவில்லை. இதை மாற்ற '8 to 18' என்ற புதிய திட்டத்தை கொண்டு வரப்போகிறோம். விளையாட்டு வீரர்களுக்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்கப்படும். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான செலவுகளை அரசே ஏற்கும்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com