ஆம்பூர் அருகே +2 மாணவனை விடுவிக்க ரூ.10,000 லஞ்சம்: காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் லஞ்சம் கேட்டது உறுதியானது.
Sub-Inspector Mathialagan
Published on: 
Summary

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவழி தகராறு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் பொதுவழிப் பாதை தொடர்பாக, அங்கு வசிக்கும் மார்க்கபந்து மற்றும் மணிமேகலை ஆகியோரது குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக இடத் தகராறு நிலவி வந்தது. இந்த தகராறு சம்பவத்தன்று வாக்குவாதமாகத் தொடங்கி, பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறியது.

மாணவனிடம் விசாரணை

இதுகுறித்து இரு தரப்பினரும் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தச் சென்றார். அப்போது வீட்டில் மணிமேகலை இல்லாததால், அவரது மகனான பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவனை மதியழகன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

ரூ.10,000 லஞ்ச கோரிக்கை

விசாரணை முடிவில், அந்த மாணவனை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10,000 லஞ்சமாகத் தர வேண்டும் என மதியழகன் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர், இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அக்‌ஷய் அணில் வாக்ரேவிடம் உடனடியாகப் புகார் அளித்தனர்.

சஸ்பெண்ட் நடவடிக்கை

புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதையடுத்து, அவரை முதலில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பின், மதியழகனை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து எஸ்பி அதிரடி உத்தர பிறப்பித்தார். இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com