

ஒரு வாரத்தில் வீரமணி மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் போக்சோ கோர்ட்டில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள்.
சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணை தீவிரமடைந்து உள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் கண்டு தங்களது விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறார்கள்.
சென்னை ஐஸ்அவுசை சேர்ந்த சிறுமி ஒருவர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் வழக்குப்போடப்பட்டு இருக்கிறது. 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்த வழக்கு விசாரணையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்படி இன்னும் ஒரு வாரத்தில் வீரமணி மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் போக்சோ கோர்ட்டில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து 6 மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முழுமையாக முடித்து வீரமணிக்கும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் உரிய தண்டனையை வாங்கி தருவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பாலியல் குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்கள் அதில் இருந்து பின்வாங்கும் வகையில் வீரமணி வழக்கல் உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதற்கான அனைத்து தடயங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.