

தமிழகத்தில் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க 10-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) நிறைவடைந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக 29.9.2026 மற்றும் 1.10.2026 ஆகிய தேதிகளில் கடிதங்களை அனுப்பியுள்ளது.
அதன்படி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் (இன்று, நாளை) சிறப்பு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்கிறது. இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக. தேவைக்கேற்ப மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் வரும் 10-ந் தேதி (சனிக்கிழமை) நடத்தப்படும். முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்படும்.
மேலும், தகுதியுடைய இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வசதியாகவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவு குழுக்களின் சேவைகள் திறம்பட பயன்படுத்தப்படும். சிறப்பு இயக்கம் குறித்து ஊடகங்கள் மூலமாகவும், மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் மூலமாகவும் பரவலான விளம்பரம் செய்யப்படும்.
சிறப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து கண்காணிப்பதற்கும், அறிவுறுத்தல்களைத் திறம்பட செயல்படுத்து வதை உறுதி செய்வதற்கும், வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள், இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியை உள்ளடக்கிய, முறையே திருப்பூர் மட்டும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெறாது என்று தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.