மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 5 அடுக்கு பலத்த பாதுகாப்பு

மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருந்தன. காலை முதலே வாக்காளர்கள் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டு கழக ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டு கழக ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Published on: 
Summary

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அமைதியாக முடிந்தது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் தொடங்குகிறது, முழுமையான கண்காணிப்புடன் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மது​ராந்​தகம், தா​ராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. மது​ராந்​தகம் தொகு​தி​யில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமர​வேல், தி.மு.க. வேட்பாளர் பரந்​தாமன், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்​பத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி​ராமன் மற்​றும் சுயேச்சை​கள் என மொத்​தம் 27 பேர் போட்டியிட்டனர்.

5 முனைப்போட்டி

தாராபுரம் தொகு​தி​யில் த.வெ.க. வேட்பாளர் சத்​யபா​மா, தி.மு.க. வேட்பாளர் சுகன்​யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானு​ம​தி, இந்​திய கம்யூனிஸ்டு வேட்பாளர் லட்​சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்​திகா மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 22 பேர் போட்டியிட்டனர். இதனால் இந்த தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டது.

2 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருந்தன. காலை முதலே வாக்காளர்கள் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். முதல் முறை வாக்காளர்களும் ஏராளமானோர் ஓட்டு போட்டனர். 2 தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

வாக்குப்பதிவு சதவீதம்

மதுராந்தகம் தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 926 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 797 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 65 பேர் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று நடந்த இடைத்தேர்தலில் 91 ஆயிரத்து 131 ஆண் வாக்காளர்களும், 93 ஆயிரத்து 258 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 34 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 423 பேர் வாக்களித்து இருந்தனர். மொத்தம் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலை விட 7.1 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தன. தாராபுரம் தொகுதியில் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 1,79,337 பேர் வாக்களித்து இருந்தனர். கடந்த தேர்தலை விட 9.61 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தன. நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது.

சீல் வைப்பு

மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் அனைத்து மின்னணு எந்திரங்களும் சீல் வைக்கப்பட்டன. பின்னர் மின்னணு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேனில் வாக்கு எண்ணும் மையமான செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டுக்காக ஒருங்கிணைந்த பயிற்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் வைக்கப்பட்டு உள்ளது.

மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தாராபுரம்

தாராபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து மையங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள், அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தாராபுரத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

​மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மனீஷ் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் வந்து, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்தார். அதன்பின் லாரிகளில் இருந்த எந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன.

பாதுகாப்பு

எல்.ஆர்.ஜி கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும்​ மத்திய துணை ராணுவப்படை, ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம், வாக்கு எண்ணும் மையம் மற்றும் கல்லூரி வளாகத்தை சுற்றி மொத்தம் 64 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 5 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை இந்த தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்கும்.

வாக்கு எண்ணிக்கை

நாளை மறுநாள் (9-ந்தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் சி.சி.டி.வி. கேமரா மூலம் முழுமையாக கண்காணிக்கப்பட உள்ளது. அன்று காலை 11 மணியளவில் வெற்றி நிலவரம் தெரிய வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com