சட்டமன்றக் கண்ணியம் காக்கப்பட வேண்டும்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உருக்கமான வேண்டுகோள்

பேரவையில் சில உறுப்பினர்கள் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.
J.C.D. Prabhakar
Published on

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவையின் விவாதங்களின் போது சட்டசபை உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும், அவையின் மரபுகள் மீறப்படுவது குறித்தும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். மக்கள் மன்றமான சட்டமன்றத்தை ஜனநாயகப் பண்புகளோடு நடத்த உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக உணர்வோடு அவையை நடத்தும் கடமை

சட்டமன்றத்தில் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நான் வருத்தத்துடன் ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன். மிகுந்த ஜனநாயக உணர்வோடும் அன்போடும் சபை கண்ணியத்தை மீறாமல் அனைவருக்கும் வாய்ப்பளித்து இந்த சபையை இப்படித்தான் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ, அப்படி இருக்க வேண்டும் என்றுதான் முதலமைச்சர் அளித்த இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இரு தரப்பு எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி

தொடர்ந்து பேசிய சபாநாயகர், பேரவையில் சில உறுப்பினர்கள் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஆளுங்கட்சி தரப்பிலும் சில எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் தவறாகவும் அவையின் மரபுகளுக்கு முரணாகவும் இருப்பதாக அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். மக்கள் நலன் சார்ந்த சட்டமன்ற விவாதங்களின் தன்மையைக் குறைக்கும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அவையின் கட்டுப்பாட்டைப் பேண வேண்டிய பொறுப்பு தமக்கு இருந்தாலும், எந்தவொரு உறுப்பினரையும் பேரவையில் இருந்து நீக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ தாம் விரும்பவில்லை என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார். "யாரையும் அவையில் இருந்து நீக்கிவிடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்ட அவர், உறுப்பினர்கள் அனைவரும் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு, அவையின் கண்ணியத்தையும் பெருமையையும் காப்பாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com