

தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளார்.
மனுவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து வழக்கை முடித்துவைப்பதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நீண்டநாட்களாக தமிழ்நாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த வழக்கு முடிவுப் பெற்றுள்ளது.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், லண்டனில் இருக்கும் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதியிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசியதாகவும், அப்போது மனப்பூர்வமாக மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
வெவ்வெறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் இந்து முறைப்படி விஜய்யும், சங்கீதாவும் திருமணம் செய்துகொண்டனர். விஜய் கிறிஸ்தவர், சங்கீதா இந்து. விஜய்யின் ரசிகையாக இருந்தப் பெண்ணை, அவரது மணப்பெண்ணாக மாற்றியது விஜய்யின் தந்தை இயக்குநர் சந்திரசேகர்தான்.
இந்தத் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணமான மறுஆண்டே மகன் ஜேசன் சஞ்சயும், 2005-ல் மகள் திவ்யா சாஷாவும் பிறந்தனர்.
இவ்வாறு இப்பந்தம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தநிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்து விஜய்யின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ரசிகர்களை தாண்டி இந்தச் செய்தி அப்போது மட்டுமின்றி இன்றுவரை தமிழ் சினிமாத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக இருந்தது.
சங்கீதா சொர்ணலிங்கம் தனது விவாகரத்துக் கோரிய மனுவில், விஜய் நீண்டநாட்களாக மூன்றெழுத்துப் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து வருவதாகவும், இது தனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாக குறிப்பிட்டிருந்தார்.
விஜய் உடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தது தனக்கு மட்டுமின்றி, தனது பிள்ளைகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இருவருக்கும் இடையே நீண்டநாட்களாகவே இந்த பிரச்னை நிலவிவந்ததாகவும், முன்னரே சங்கீதா விவாகரத்து கோரியதாகவும், இதனால் அவரை விஜய் வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் இந்த திருமண உறவை ரத்து செய்யக்கோரியதுடன், நிரந்தர ஜீவனாம்சமும், திருமண வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமையையும் கோரியிருந்தார்.
விஜய்யின் அரசியல் பிரவேசத்தினாலும், சங்கீதா லண்டனில் இருப்பதாலும், மனுதாரர்கள் ஆஜராகாமல் இந்த விவாகரத்து வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முந்தைய விசாரணையின்போது, இரு தரப்பினரும் ஆஜராகவில்லை. அவர்களுக்காக அவரவர் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்நிலையில் விஜய் தரப்பில் இருந்து ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது. ஆனால் சட்டசபை முடிந்தபின் ஆஜராகுமாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மறுபுறம் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதி அவரிடம் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்போது, வழக்கை தொடர தான் விரும்பவில்லை எனவும், முழு சுயநினைவுடன் விவாகரத்து வழக்கை திரும்பப் பெறுவதாகவும் சங்கீதா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் இந்த வழக்கை முறைப்படி முடித்து வைத்துள்ளது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.
இந்த நேர்காணல் வெளியான சில நாட்களிலேயே, விவாகரத்து மனுவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சங்கீதா சொர்ணலிங்கம் விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றதால், சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தபோதிலும், தம்பதியினர் முறைப்படி சமரசம் செய்துகொண்டனரா அல்லது தொடர்ந்து சேர்ந்து வாழ்வார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இருதரப்பினரும் இதுதொடர்பாக இதுவரை அறிக்கை எதையும் வெளியிடவும் இல்லை.