

முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க. நிர்வாகி சக நண்பர்களால் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாக்கனி (வயது 28). இவர் அ.தி.மு.க.வின் விருதுநகர் மேற்கு ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் இருந்தார். ராஜாக்கனிக்கு திருமணமாகி 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீரசிங்கம் என்ற இளைஞருக்கும் கடந்த மாதம் கோயில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் ராஜாக்கனியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி நேற்று இரவு வீரசிங்கம் தனது நண்பரான மாரீஸ்வரனுடன் ராஜாக்கனியையும் மது அருந்துவதற்காக அழைத்துள்ளார். அதன்படி அவர்கள் இருசக்கர வாகனத்தில் நாகலாபுரம் சாலையில் உள்ள கல்யாண மண்டபம் அருகே நெல் களத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மது அருந்திக் கொண்டிருந்தபோது கோயில் திருவிழாவின்போது தன்னை தாக்கிய ராஜாக்கனியை அடிக்க வேண்டும் என்று வீரசிங்கம் கூறியுள்ளார்.
உடனே மதுபோதையில் இருந்த வீரசிங்கம் மற்றும் அவரது நண்பர்களான மாரீஸ்வரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் ராஜாக்கனியை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது தப்பி மெயின்ரோட்டிற்கு ஓடிய ராஜாக்கனியை விரட்டி சென்று பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளனர். அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. உயிருக்கு போராடிய ராஜாக்கனியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவமறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க. நிர்வாகி சக நண்பர்களால் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.