சிவகங்கை மாவட்டம் இரட்டை கொலை சம்பவத்தில் சிறுவன் உள்பட 13 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் இரட்டை கொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை.
இரட்டை கொலை வழக்கு
இரட்டை கொலை வழக்கு
Published on

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள துவரலம் கண்மாய் புது குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 24). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதுபாரில் வேலை பார்த்து வந்தார். இவரும் இவரது நண்பரான சிறுவேலங்குடியை சேர்ந்த பூப்பாண்டி (25) என்பவரும் சிவகங்கை அருகே உள்ள பழமலை நகர் கொடிக்கண் மாய் பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய 2 பேரையும் ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

உறவினர்கள் மறியல்

இந்தநிலையில் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவிலில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடந்தது.

30 பேர் கைது

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் போராட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி அங்கிருந்து அகற்றியதுடன், 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்வின், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் காதர் மீரா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆள்மாறாட்டத்தில் கொலை?

இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என்றும், வேறொரு நபர்களை கொலை செய்வதற்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் இந்த கொலை நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த உறவினர்கள், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கிடையே இந்த கொலையில் தொடர்புடைய சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்த ஆகாஷ் (21), அலுபிள்ளைதாங்கியை சேர்ந்த மணிகண்டன் (20), சின்னகண்ணனூரை சேர்ந்த ராஜகோபால் (23), சிவகங்கை மேலரத வீதியை சேர்ந்த சபரிவேலன் (21), கருப்பாயூரணியை சேர்ந்த சுபாஷ் (21) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில் இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக இதுவரை சிறுவன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com