

கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், பாகனேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பொன்னி (வயது 75). இவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கடை வைத்துள்ளார். தினமும் இரவு பொன்னி கடையில் தூங்குவது வழக்கம்.
அதன்படி நேற்று இரவும் அவர் கடையில் தூங்கினார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையில் தூங்கி கொண்டிருந்த பொன்னியின் தலையில் கல்லை தூக்கி போட்டனர்.
இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இன்று காலையில் மூதாட்டி தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக மதகுபட்டி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
75 வயது மூதாட்டியை கொலை செய்தது யார்? முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்த கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மதகுபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.