ஜாமீனில் வந்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் படுகொலை

முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையுண்ட நவீன் மற்றும் விக்னேஷ்
கொலையுண்ட நவீன் மற்றும் விக்னேஷ்
Published on: 
Summary

ஒரே நாளில் வெவ்வெறு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, முன்விரோதம் மற்றும் பழிக்குப் பழி காரணமாக இளைஞர்கள் குறிவைத்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

பிரபல ரவுடி

இந்நிலையில், ஒரே நாளில் வெவ்வெறு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் நவீன் (வயது 25). இவர் மீது காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபல ரவுடியாக வலம் வந்த அவர் ஒரு வழக்கில் கைதாகி சமீபத்தில்தான் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நண்பர்களைச் சந்திப்பதற்காக கல்லல் அருகே உள்ள பொரட்டி கிராமத்திற்கு அவர் சென்றிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து அங்கு வந்த மர்ம கும்பல் நவீனை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க நவீன் ஓடினார். ஆனாலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை ஓட, ஓட துரத்திச் சென்று தாக்கி அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கல்லல் போலீசார் கொலையுண்ட நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு வாலிபர்

மானாமதுரை அருகே உள்ள வேலூர் முருகபாஞ்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (23). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று தீபாவளியையொட்டி தனது நண்பர் முனீஸ்வரனுக்கு வாழ்த்துகள் கூறிவிட்டு அதே பகுதியில் அவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முனீஸ்வரன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

7 பேரை பிடித்து விசாரணை

இதுகுறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை விக்னேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் 4 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வெவ்வேறு சம்பவங்களில் 2 பேரை கொலை செய்யப்பட்டது தீபாவளி நாளில் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X