

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று தொடங்கப்படுகிறது.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட் என சிறப்பு சீருடை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கருப்பு நிற தொப்பியும், கருப்பு நிற ஷூவும் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கடந்த 29-ந்தேதி அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
சென்னையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தங்கள் பணியை தொடங்க உள்ளனர்.