

கொள்ளை நடைபெற்ற பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததைச் சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டி சேங்கை ஊரணி வீதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 66). இவர் கரூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
இவரது சகோதரர்கள் நாச்சியப்பன் (62), சிங்காரம் (58) ஆகியோரும் குடும்பத்துடன் வெளியூர்களில் தங்கி தொழில் செய்து வருகின்றனர். இதன் காரணமாக உலகம்பட்டியில் உள்ள வீடு பெரும்பாலும் பூட்டியே கிடக்கும்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவுகளில் இருந்த பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டின் தனி அறையில் இருந்த அலமாரிகளை உடைத்து அதிலிருந்த சுமார் 50 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பிள்ளையார் சிலை, வெள்ளி காமாட்சி விளக்கு உள்ளிட்ட சுமார் 12 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில் வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து நடராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மேற்கண்ட நகை, வெள்ளி, பணம் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உலகம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
கொள்ளை நடைபெற்ற பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததைச் சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைப்பது சவாலாக உள்ளது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் துணை கண்காணிப்பாளர் சண்முகம் சுந்தரம் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என மொத்தம் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உலகம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.