மாமல்லபுரத்தில் சிற்ப தொழிலுக்கு கல் தட்டுப்பாடு

மாமல்லபுரம் சுற்றுலா பகுதியாக மட்டுமின்றி தற்போது புவிசார் குறியீடு பெற்ற சிற்பத்தொழில் பகுதியாகவும் உள்ளது.
Mahabalipuram
Published on: 
Summary

மாமல்லபுரம் அரசு சிற்பக்கலைக் கல்லுாரி உருவாகியதும், அதில் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்து கல்சிற்பம், சுதைசிற்பம், மரச்சிற்பம், போன்றவற்றை படிக்க துவங்கினர்‌‌.

பல்லவர்களின் சிற்பக் கலை நகரமாக மாமல்லபுரம் விளங்குகிறது. பண்டைய காலத்து பாரம்பரிய சிற்பக்கலை, தற்காலத்திலும் முக்கிய தொழிலாக இங்கு சிறந்து விளங்குகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளி மாவட்ட பரம்பரை சிற்பிகள் இங்கு குடியேறி சிற்பத்தொழில் செய்தனர். பின்னர் மாமல்லபுரம் அரசு சிற்பக்கலைக் கல்லுாரி உருவாகியதும், அதில் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்து கல்சிற்பம், சுதைசிற்பம், மரச்சிற்பம், போன்றவற்றை படிக்க துவங்கினர்‌‌.

மாமல்லபுரம்

இதன் வளர்ச்சியாக தற்போது ஆயிரக்கணக்கான சிற்பக் கலைஞர்கள் மாமல்லபுரத்தில் உள்ளனர். தற்போது சிற்பத் தொழில் மேம்பட்டு, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சிற்பக் கூடங்கள் இயங்கி வருகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு தேவைகளுக்கு, கடவுள் சிலைகள், ஞானிகளின் சிலைகள், மிருகங்கள், பறவைகள், கற்பனை சிலைகள் என நவீன வடிவ சிலைகள் மாமல்லபுரத்தில் செதுக்கப்படுகின்றன.

சிற்பத் தொழில்

இந்த சிற்பத் தொழில் மயிலாடி, அவினாசி ஓசூர் என பல்வேறு பகுதிகளில் செய்தாலும், பல்லவர் காலத்து பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் புராதன சிற்பங்கள் மாமல்லபுரத்தில் சிறந்து விளங்குவதால், இப்பகுதியை கற்சிற்பநகராக மத்திய அரசு அங்கீகரித்து, புவிசார் குறியீடும் வழங்கியது.

கல்குவாரி

தொழில் முக்கியத்துவம் கருதி, சிலைகள் செதுக்கும் கற்களுக்காக பிரத்யேக கல்குவாரி ஒதுக்ககோரி, நீண்டகாலமாக அரசிடம் சிற்பிகள் முறையிட்டும், இதுவரை ஒதுக்கவில்லை. அதன் காரணமாக சுவாமி சிலைகள் செதுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக சிற்ப கலைஞர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சிற்பிகள் கூறும்போது,

” மாமல்லபுரம் சுற்றுலா பகுதியாக மட்டு மின்றி தற்போது புவிசார் குறியீடு பெற்ற சிற்பத்தொழில் பகுதியாகவும் உள்ளது. இந்த தொழில் மூலம் அரசாங்கத்திற்கு அன்னிய செலாவணி அதிகளவில் கிடைக்கிறது.

ஆனால், தொழிலுக்கு தேவையான கற்கள் கிடைக்கவில்லை. ஒரு மாதத்திற்கு சராசரியாக, 200 டன்னிற்கும் மேல் எங்களுக்கு கற்களின் தேவை உள்ளது. தனி நபர்கள் அனுமதியின்றி வெட்டி விற்பதையும், தொலைதுார மாவட்ட பகுதி குவாரிகளில் இருந்தும் வாங்குகிறோம்.

கற்கள்

அனுமதி இல்லாமல் வெட்டி எடுப்பவர்கள், அரசின் நெருக்கடியால், அவசரத்திற்கு கற்கள் தர மாட்டார்கள். வேறு குவாரிகளில் இருந்து வாங்கி வரும் போது, இங்கு கல்லை கொண்டு வரும் செலவு அதிகம் என்பதால், சிலைகளின் விலையும் கூடுகிறது. இந்தநிலை நீடித்தால், பாரம்பரிய சிற்பத் தொழில் முடங்கும். காஞ்சீபுரம் மாவட்டம், சங்கராபுரத்தில், சிலைகள் செய்யும் தரமான பாறை கிடைக்கிறது. சிற்பத் தொழில் கற்கள் தேவைக்காக, நாங்கள் குவாரியாக பயன்படுத்த பல ஆண்டுகளாக அரசிடம் கேட்கிறோம். ஆனால் இதனை கண்டு கொள்வதில்லை என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com