

உடுமலை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பச்சிளம் குழந்தைக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உரிய நீதி கேட்டு குழந்தையின் தந்தை தேசியக் கொடியை ஏந்தியபடி மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (32). இவர் கோவையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (26). இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்த பிரியதர்ஷினி பிரசவத்திற்காக உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 8-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், பிரசவத்திற்குப் பிறகு பச்சிளம் குழந்தையின் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தோஷ்குமார் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, ஒரு நாள் பொறுத்திருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், மூன்று நாட்கள் கடந்தும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை சந்தோஷ்குமார், உடுமலை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு முன்பு தேசியக் கொடியை பிடித்தபடி தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"எனது மனைவிக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவர்களின் அஜாக்கிரதை மற்றும் தவறான சிகிச்சையால்தான் எனது குழந்தைக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உரிய சிகிச்சை அளித்து சரிசெய்வதாகக் கூறிய மருத்துவர்கள், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது குழந்தைக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கும் வரை எனது போராட்டம் தொடரும்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடுமலை காவல் துறையினர் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டதாகத் தந்தை தர்ணாவில் ஈடுபட்ட நிகழ்வு உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.