ஆயுத பூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை- ஆம்னி பஸ் கட்டணம் அதிரடி உயர்வு: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

ஆம்னி பஸ்களில் 16 மற்றும் 17-ந்தேதிகளில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்டண விவரங்களை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஆம்னி பஸ்கள்
ஆம்னி பஸ்கள்
Published on: 
Summary

ஆயுத பூஜை, விஜயதசமி, சனி, ஞாயிறு சேர்ந்து 4 நாள் தொடர் விடுமுறை கிடைப்பதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை 2, 3 மடங்கு உயர்த்தியுள்ளன. கொடைக்கானல், ஊட்டி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தென் மாவட்டங்களுக்கு வழக்கத்தை விட பல ஆயிரம் ரூபாய் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பயணத்தை மாற்றிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

பண்டிகை காலங்களில் உள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது.

தொடர் விடுமுறை

ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயிக்க முடியாததால் அதிக கட்டண வசூல் தீபாவளி, பொங்கல் பண்டிகை மட்டுமல்லாது தொடர் விடுமுறை எப்போதெல்லாம் வருகிறதோ அதனைப் பயன்படுத்தி 2, 3 மடங்கு கட்டணம் உயர்வாக வசூலிக்கப்படுகிறது.

தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமையோடு 4 நாட்கள் அரசு விடுமுறை நாளாக இருப்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது.

கட்டண உயர்வு

அடுத்த மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) ஆயுத பூஜையும், 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி பண்டிகையும் வருவதால் ஒவ்வொரு தனியார் ஆம்னி பஸ்களின் இணையதளத்தில் கட்டணங்கள் பல மடங்கு உயர்வாக குறிப்பிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

ஆம்னி பஸ்களில் 16 மற்றும் 17-ந்தேதிகளில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்டண விவரங்களை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கொடைக்கானலுக்கு ரூ.4999, ஊட்டிக்கு ரூ.3500, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு ரூ.3000க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள்

வழக்கமாக இந்த நகரங்களுக்கு செல்வதற்கு ரூ.2 ஆயிரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது பெரும்பாலான ஆம்னி பஸ்களில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய நகரங்களுக்கு செல்ல ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்கள் முடிந்து சொந்த ஊர் திரும்ப 20 மற்றும் 21-ந்தேதி ஆகிய 2 நாட்களும் கட்டணம் 2 மடங்கு அதிகமாக உள்ளது.

வழக்கமான நாட்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ.1200, ரூ.1500 என்ற அளவில் கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது ரூ.3500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் பயணத்தை தவிர்க்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முன்பதிவு

2 வாரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்கின்ற நிலையில் கூட ஆம்னி பஸ்களில் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படுகிறது. ஆயுதபூஜை விடுமுறைக்கு முந்தைய நாட்களிலும் அதற்குப் பிந்தைய நாட்களிலும் கட்டணம் குறைவாக இருக்கின்ற நிலையில் அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கட்டணத்தை உயர்த்தி வைத்திருப்பது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடைசி நேர நெரிசலையும் , அதிக கட்டணத்தையும் தவிர்க்க எண்ணி 20 நாட்களுக்கு முன்பே பஸ் முன்பதிவு செய்ய முயன்ற மக்கள் இக்கட்டண உயர்வை பார்த்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

இது குறித்து ஊட்டிக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பயணி ஒருவர் கூறுகையில், முன்னதாகவே திட்டமிட்டால் நியாயமான கட்டணத்தில் செல்லலாம் என்று நினைத்தேன், ஆனால் கட்டணம் இந்த அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆயுத பூஜைக்கு அடுத்தடுத்த நாட்களில் பயண கட்டணம் ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை மட்டுமே இருப்பதை அறிந்து எனது பயண தேதியை மாற்றிக் கொண்டேன். அதிக கட்டணம் கொடுத்து செல்வதை விட கூடுதலாக ஒரு நாள் தங்கி விட்டு செல்வதே சிறந்தது என்றார்.

இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறும்போது:-

நிர்ணயம்

ஆம்னி பஸ்களில் அதிகபட்ச கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பது 2024-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு சிலர் அதிகமாக வசூலிப்பதால் அனைத்து உரிமையாளர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com