3 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் vs செங்கோட்டையன்

லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது.
KKSSRR-Minister Sengottaiyan
Published on

மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் அருண்ராஜ்," முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதலமைச்சருக்கு நன்றி" என்றார்.

சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் பேசுகையில்," கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது" என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்,"பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது" என்றார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்:

திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கும் பட்டா வழங்கினோம்.

திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.

மத்திய அரசிடம் ரூ.5000 கோடி கேட்கப்பட்ட நிலையில் ரூ.1,000 கோடியைத் தான் கொடுத்தது.

மத்திய அரசு போதிய நிதி அளிக்காவிடினும் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கினோம்.

சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.

தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்?.

அமைச்சர் செங்கோட்டையன்:

100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம்.

மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்:

கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது.

அமைச்சர் செங்கோட்டையன்:

திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது.

அமைச்சர் ராஜ்மோகன்:

கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை.

அமைச்சர் செங்கோட்டையன்:

பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்:

ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம்.

அமைச்சர் செங்கோட்டையன்:

முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

இவ்வாறு பேசினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com