

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் ஜெம் வீரமணியின் மேலாளர் சக்திவேல் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஓட்டுநர்கள், ஊழியர்கள் என 7 பேர் கைதாகியுள்ள நிலையில், தற்போது 8-வது நபராக மேலாளர் சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெம் வீரமணிக்கு சிறுமிகளை அழைத்து வருவதிலும், பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும், ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கைதைத் தொடர்ந்து வீரமணியின் வீடு, சென்னை தேனாம்பேட்டை பங்களா மற்றும் கானத்தூர் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஜெம் வீரமணி மீது தற்போது 7-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் போக்சோ சட்டப் பிரிவுகள் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, 10-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜெம் வீரமணி மற்றும் அவரது முக்கிய கூட்டாளிகள் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.