

கோவை பீளமேடு ஏ.டி.காலனியை சேர்ந்தவர் அசோக்குமார், மூணாறில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கவுசல்யா தேவி. இவர் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் அகிலன் (வயது 16). இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து அகிலன் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அவரது தாயார் கவுசல்யா வேலைக்கு சென்றார். மதியம் ஒரு மணிக்கு கவுசல்யா சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு மாணவர் அகிலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்து கவுசல்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றி பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அகிலன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தாயார் கவுசல்யாதேவி, பீளமேடு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கூறி உள்ளார். அந்த புகாரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் ஸ்காலர்ஷிப் பெறும்போது சாதியை பற்றி தெரிந்து கொண்ட சக மாணவர்கள் எனது மகன் அகிலனிடம் பேசாமல் ஒதுக்கி வைத்து விட்டதாக தெரிவித்தான். அதனால் வேதனையில் இருந்து வந்த அகிலன், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அகிலனின் பெற்றோரிடமும், அகிலன் படித்த பள்ளிக்கு நேரில் சென்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மாணவன் அகிலன் தற்கொலை விவகாரத்தில் வகுப்பாசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். சாதிய வன்முறைக்கு ஆசிரியர் காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர் அருண்குமார் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நகல் வரும் வரை உடலை பெற மாட்டோம் எனக்கூறி பெற்றோர், உறவினர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.