பிளஸ்-1 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது 2 பிரிவுகளில் வழக்கு: 'சஸ்பெண்டு' செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு

பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தற்காலிகமாக பாளை கோரிப்பள்ளத்தை சேர்ந்த கிங்ஸ்லி என்பவர் வேலை பார்த்து வந்தார்.காயம் அடைந்த 3 மாணவர்களும் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.
பிளஸ்-1 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது 2 பிரிவுகளில் வழக்கு: 'சஸ்பெண்டு' செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நேற்று அந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 3 மாணவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் காயங்களுடன் சிகிச்சையில் சேர்ந்தனர். அவர்கள் தங்களை பள்ளி ஆசிரியர் தாக்கியதாக புகார் கூறினர். அந்த மாணவர்களுக்கு கண் உள்ளிட்ட பாகங்களில் காயங்கள் இருந்தன.

இதுதொடர்பாக பாளை போலீசார் விசாரித்து வந்த நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரை கம்பால் அடிக்கும் காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தியதில், பாளை அரசு உதவி பெறும் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது.

அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தற்காலிகமாக பாளை கோரிப்பள்ளத்தை சேர்ந்த கிங்ஸ்லி(வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் நடந்த மதிப்பீட்டு தேர்வில் பர்கிட் மாநகரை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். அதனால் ஆங்கில ஆசிரியர் அந்த மாணவரை அடித்துள்ளார்.

இந்த காட்சிகளை அதே வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து பரவ விட்டனர். இந்த தகவல் ஆசிரியர் கிங்ஸ்லிக்கு தெரியவரவே, வீடியோ எடுத்த 2 மாணவர்களை தனியாக அழைத்து சென்று அடித்துள்ளார். இதனால் காயம் அடைந்த 3 மாண வர்களும் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பாளை போலீசார், ஆசிரியர் கிங்ஸ்லி மீது இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர் கிங்ஸ்லியை 'சஸ்பெண்டு' செய்து பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com