

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடந்தது. இதில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-
கொளத்தூரில் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயிக்காதது கஷ்டமாக இருக்கிறது. நான் ரொம்ப கிண்டலான ஆள், நக்கல் பிடித்த ஆள், சினிமாவில் பார்த்து இருப்பீர்கள். எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக்கொள்வேன். இதை அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட தலைவரை தோற்கடித்து விட்டோமே என்று பட்டு திருந்தினால் தான் புத்தி வரும். (அப்போது சத்யராஜ் தன்னை அறியாமல் கண் கலங்கினார். அவரது நா தழுதழுத்தது. கருப்பு கண்ணாடியை மீறி வந்த கண்ணீரை துடைத்தார்).
ஒரு முதல்வர் இப்போது எப்படி பேசுகிறார். வாயில் நல்லா வருகிறது என்கிறார். எனக்கு கூடத்தான் வாயில் நல்லா வரும். நல்லா நல்லா வரும். என்னை இன்ஸ்டாகிராமில் அவரது வாரியர்ஸ் வெங்காயமெல்லாம் திட்டுவார்கள். கவலையே படமாட்டேன். எனக்கு நிறைய கெட்ட வார்த்தை தெரியும். நான் மரியாதையாக அதையெல்லாம் அமுக்கி வைத்திருக்கிறேன். உங்களுக்கு வேண்டுமென்றால் ஏதாவது கேளுங்கள்... நிறைய எடுத்து கொடுக்கிறேன்.
தமிழகத்தை பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சி தான். மு.க.ஸ்டாலின் செய்த நலத்திட்டங்களுக்கு பெயரை மட்டும் மாற்றினாலே உங்களுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும். அவர் கொண்டுவந்த நலத்திட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் மாற்றினால் கண்டிப்பாக சரிப்பட்டு வராது.
சினிமா மோகம், சினிமா கவர்ச்சி இருக்க வேண்டியதுதான். நானும் ஒரு நடிகன் தான். ஆனால் நாம் சிந்தித்து சீர்தூக்கி பார்க்க வேண்டும். மாற்றம் வேண்டும் என்றால் என்ன மாதிரியான மாற்றம் என்று பார்க்க வேண்டும். கருத்தியல் ரீதியான மாற்றம் என்றால், திராவிட கருத்தான சமூக நீதிக்கு நேர்மாறான ஒரு கருத்தியல் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் சனாதனம். உங்களுக்கு இது பிடிக்கவில்லையா? அங்கு ஓட்டு போட்டு விடுங்கள்.
கருத்தியல் ரீதியாக இதை விட வேகமாக ஒன்று வேண்டுமென்றால் கம்யூனிஸ்டு கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்து அவர்களை முதல்வர் ஆக்குங்கள். பட்டியல் இனத்தவர்களுக்கான விடுதலைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஜெயிக்க வையுங்கள். தமிழ்நாடு முதல்வர் என்னுடைய அன்பு தம்பி விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது என்னுடைய கொள்கை தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் என்றார். திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள். அப்படியென்றால் அதுவும் ஒரு தி.மு.க. தான், ஒரு அ.தி.மு.க. தான். தலைவர்கள், நபர்கள் மட்டும் தான் மாறுகிறார்கள். அந்த தலைவர்களும், நபர்களும் மாறும் போது மக்கள் யோசித்து பார்க்க வேண்டாமா?
எல்லா கட்சியிலும் ஒரு குறை இருக்கும். விமர்சனம் இருக்கும். அதை நிவர்த்தி செய்வதற்கான ஒருவருக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று நீங்கள் யோசிக்க வேண்டாமா? சரி ஓட்டு போட்டு விட்டீர்கள். இனிமேலாவது கேள்வி கேட்டு பழகுங்கள்.
சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் எதிரில் இருந்து கேள்வி கேட்டு கிழி கிழி என்று கிழித்துக்கொண்டு இருக்கிறார். நீங்கள் இரண்டு பேரும் நண்பர்கள் தானே. சினிமாவில் ஒன்றாகத்தானே இருந்தீர்கள். நாளைக்கு இந்த கேள்வியையெல்லாம் கேட்கப்போகிறேன் என்று முதலிலேயே போன் செய்து தெரிவித்து இருந்தால் பதில் தயார் செய்து கொண்டு வருவார். திடீரென்று சட்டசபையில் எழுந்து ஒரு கேள்வி கேட்டால் அவர் எப்படி பதில் சொல்வார். போய் டுவிட்டரில் தான் பதில் சொல்லி ஆகணும். வேற வழியில்லை. அவர் சட்டசபையில் அமைதியாக இருப்பார். நன்றி தெரிவிக்க போகும் இடத்தில் ஆக்ரோஷமாக பேசுவார்.
கொளத்தூரில் தலைவர் மு.க.ஸ்டாலின் தோற்றார். அடுத்த நாள் நன்றி தெரிவிக்க செல்கிறார். அந்த கூட்டத்தில் மக்கள் அனைவரும் அழுகிறார்கள். எங்கே தவறு நடந்தது என்று தெரியவில்லை? பராசக்தி படத்தில் வருவதை போல கவர்ச்சி நடனம் பார்க்க போய் இருப்பதையெல்லாம் அடித்துக்கொண்டு சென்று விட்டார்கள். இனிமேல் தி.மு.க. ஆட்சி வந்து தான் அதை சரி பண்ண வேண்டும். கலைஞரின் 104-வது பிறந்த நாளுக்கே தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்து விடுவார். அவரது தலைமையில் தான் கலைஞரின் 104-வது பிறந்த நாள் விழா நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.