

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கூத்தனூர் ரோடு எஸ்ஆர்டி கார்டன் பகுதியில் வசிப்பவர் செல்வம் என்கிற பழனிச்சாமி (56) கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர்கள் சத்தியமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகே சில நாட்கள் முன்பு பொட்டிங் ஷாப் திறந்து உள்ளனர்.
இந்த நிலையில் வெளியே குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று இரவு வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த செயின் வளையல்கள் உட்பட 10 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சத்தியமங்கலம் டிஎஸ்பி முத்தரசு இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை இரும்பு ராடால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்து உள்ளது.
இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டு உள்ளனர் அவர்கள் எந்த வழியாக வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வந்தது.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.