

பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சரத்குமார் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“அன்புப் பெரியோர்களே…
அருமைத் தாய்மார்களே…
இனிய குழந்தைகளே…”
என்ற அன்பான குரலின் வாயிலாக தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நுழைந்து, தனது இனிய பேச்சாலும், நகைச்சுவை கலந்த நயமான தமிழாலும், பட்டிமன்ற மேடைகளைப் பண்பாட்டின் பெருமைமிக்க அரங்குகளாக மாற்றிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழ் மொழிக்கும், இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கும் அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது. தமிழறிஞரின் மறைவு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மிகுந்த பேரிழப்பு.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் புகழும், தமிழுக்கான அவரது பங்களிப்பும் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.