

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரபல ஆய்விதழ் நிறுவனமான எல்சிவியர் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் மிகச் சிறந்த டாப் 2% விஞ்ஞானிகள் பட்டியலில் சேலத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் பலர் இடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி வெளியீடுகள், எச்-இன்டெக்ஸ் (H-index), மேற்கோள்கள் (Citations) ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகளாவிய பட்டியல் ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது. இந்த மதிப்பீடு 22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இந்தத் தரவுகளில் இடம்பெற்றுள்ளன.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மற்றும் பணிபுரிந்த பின்வரும் பேராசிரியர்கள் இந்த சர்வதேசப் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
முனைவர் வி. ராஜ் (வேதியியல் துறை)
உயிர் பாலிமர் - உலோக ஆக்சைடு கலவை மூலம் பல் மற்றும் எலும்பு மருத்துவத்திற்குப் பயன்படும் உயிர் பருப்பொருள்கள் மற்றும் மனித உடலில் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு மருந்து செலுத்தும் தொழில்நுட்பம் (Drug Delivery System) சார்ந்த ஆய்வுகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முனைவர் பி. வெங்கடாசலம் (உயிரித் தொழில்நுட்பத் துறை)
தாவர உயிரிதொழில்நுட்பத் துறையில் இவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இப்பட்டியலில் இவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
முனைவர் ஜெ. பிரகாஷ் மாறன் (உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை)
உணவுத் தொழிற்சாலை கழிவுகளிலிருந்து பாலிமர்களை மீட்டெடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் நட்பு உணவு பேக்கேஜிங் (Food Packaging) முறைகள் குறித்த ஆய்வுகள்.
முனைவர் ராம்குமார் (புவி அமைப்பியல் துறை)
தென்னிந்திய நதிகளின் வடிவமைப்பு, கீழடி தொல்பொருள் பகுதியின் புவி புறஅமைப்பியல் மற்றும் வைகை நதிக்கரையோரப் பகுதிகள் குறித்த நிலவியல் ஆய்வுகள்.
முனைவர் ஆர். ரமேஷ் (இயற்பியல் துறை)
நானோ பொருட்கள் (Nanomaterials) குறித்த ஆய்வுகள் மற்றும் நானோ துகள்களைப் பயன்படுத்தி நீரைப் பிரித்து ஹைட்ரஜன் ஆற்றல் தயாரிக்கும் தொழில்நுட்பம்.
முனைவர் பழனிவேல் (இயற்பியல் துறை)
நுண்துகள்களைப் (Microparticles) பயன்படுத்தி மிகத் திறமையான முறையில் ஆற்றலைச் சேமித்து வைப்பது (Energy Storage) குறித்த ஆய்வுகள்.