சேலம் மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது

தம்மம்பட்டி, வாழப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்  மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது
Published on: 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

மாவட்டத்தில் கனமழை

இந்தநிலையில் தென்மேற்கு பருவ மழை இன்றுடன் விடைபெறும் என்றும், வடகிழக்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல் தமிழகத்தில் நிலவுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் வானில் கரு மேகங்கள் திரண்டன. அதனை ெதாடர்ந்து மாலை 4 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

வாழப்பாடி

குறிப்பாக தம்மம்பட்டி, வாழப்பாடி, ஆனைமடுவு, ஏத்தாப்பூர், கரியகோவில் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. மேலும் தம்மம்பட்டி, வாழப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சேலத்தில் சாரல் மழை

சேலம் மாநகரில் நேற்று மாலை 4 மணியளவில் மழை பெய்ய ெதாடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு வீடுகளுக்கு திரும்பிய மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் மழை நின்று விட்டது.

இதனால் கன மழை பெய்யும் என்று நினைத்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் மழையால் சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

302.8 மி.மீ. பதிவு

மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 76 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வாழப்பாடி 72.2, சேலம் மாநகர் 6.2, ஏற்காடு 6.2, ஆனைமடுவு 35, ஆத்தூர் 14.2, ஏத்தாப்பூர் 36.2, கரியகோவில் 32, சங்ககிரி 14.4, எடப்பாடி 3.4, மேட்டூர் 1, ஓமலூர் 3, டேனீஷ்பேட்டை 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 302 .8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com