வேலூரை சேர்ந்தவர் விஜயபானு (48). இவர் சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனித நேயம் என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வந்தார்.
அப்போது தங்களிடம் முதலீடு செய்பவர்களுக்கு ஒரே ஆண்டில் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்து திருப்பி கொடுக்காமல் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விஜயபானு மீது புகார்கள் குவிந்தது. இதையடுத்து விஜயபானு, செந்தில்குமார் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளி வந்தனர்.
இந்த நிலையில் இந்த மோசடியில் முக்கிய நபரான மத போதகர் செந்தில்குமார் 4 நாட்களுக்கு முன்பு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு ஜெபக்கூடத்திற்கு வந்தார்.
இதனை அறிந்த பணம் முதலீடு செய்து ஏமாந்த மக்கள் அங்கு சென்று அந்த ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செந்தில்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
தொடர்ந்து பணத்தை திருப்பி ஒப்படைக்கும் வரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்று கூறி பணம் கொடுத்து ஏமாந்த 20-க்கும் மேற்பட்டோர் 4-வது நாளாக இன்றும் ஜெபக்கூடத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த முறைகேட்டில் எங்களுக்கு பணத்தை பெற்று தர முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீசார் மீது அவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பணம் வசூலித்து கொடுத்த நபரிடம் விஜயபானு பேசிய ஆடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த ஆடியோவில், நான் இந்த வழக்கில் கைதாவதற்கு 3 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் என்னை சந்தித்து பேசினார்.
அவர் என்னுடைய தம்பி போலீஸ்காரராக இருக்கிறார். வழக்கு ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்வார் என்று கூறினார்.
அவரிடம் போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்க ரூ. 48 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளேன் என்று அவர் கூறி உள்ளார். இந்த ஆடியோ சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருவதால் இதில் தொடர்புடைய போலீசார் பீதி அடைந்துள்ளனர்.
இந்த ஆடியோவை கைப்பற்றிய உயர் போலீஸ் அதிகாரிகள் இதில் பேசி உள்ளது விஜயபானு தானா ? என்பதை உறுதி செய்ய சைபர் கிரைம் போலீசாரிடம் அதனை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்படும் பணம் அவர்களுக்கு உண்மையாகவே வழங்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் ஜோசி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மேலும் ஆடியோவில் பேசிய விஜயபானு மற்றும் அதில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி யார், யாருக்கு எவ்வளவு பணம், கொடுக்கப்பட்டது, அதனை பெற்று சென்ற பெண் யார்? என்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்த முடிவு செய்ய உள்ளனர்.
விசாரணை முடிவில் இதில் தொடர்புடைய அதிகாரிகள் சிக்குவார்கள் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.