ஹார்முஸ் நீரிணையில் மாயமான திண்டுக்கல் மாலுமி- தகவல் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்

துபாயில் 6 மாத ஒப்பந்தப் பணி எனக் கூறி அனுப்பப்பட்ட அவர், அங்கு பணியில் சேர்ந்த ஒரே வாரத்திலேயே ஈரானுக்கு மாற்றப்பட்டு சரக்குக் கப்பலில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில்  மாயமான திண்டுக்கல் மாலுமி- தகவல் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்
Published on: 
Summary

கப்பல் மாயமாகி 6 மாதங்களுக்கும் மேலாகியும் நவீன் குமார் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் மூழ்கியுள்ளனர

சர்வதேச அளவில் பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில், 2 சரக்குக் கப்பல்களுடன் மாயமான திண்டுக்கல் மாலுமி நவீன் குமாரை மீட்டுத் தரக்கோரி, அவரது தாய் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர் பதற்றம்

ஈரான் போர் பதற்றம் மற்றும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையே, பொலிவியா நாட்டின் கொடியுடன் எக்கு ஏற்றிச் சென்ற ‘பிரிட்ஜ் 1’ மற்றும் ‘பிரிட்ஜ் 2’ ஆகிய இரண்டு சரக்குக் கப்பல்கள் ஈரானின் கிஷ் தீவு அருகே கடந்த மே மாதம் 9-ந் தேதி மாயமாகின.

ரேடார் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இந்த 2 கப்பல்களில் இருந்தும் எவ்வித அவசர உதவிக்கான ‘டிஸ்ட்ரஸ்’ அழைப்புகளும் வரவில்லை. இதில் திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த வடிவேல் - பாண்டிச்செல்வி தம்பதியின் மகன் நவீன் குமார் (வயது 26) உட்பட 2 இந்தியர்கள், 3 ஈராக்கியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 6 மாலுமிகள் பணியாற்றி வந்தனர்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த நவீன் குமார், சென்னையில் ஜி.பி. ரேட்டிங் மரைன் படிப்பை முடித்துள்ளார்.

பெற்றோர் கவலை

ரூ.15 லட்சம் கடன் வாங்கி மகனைப் படிக்க வைத்த பெற்றோர், மும்பையைச் சேர்ந்த தனியார் முகமை மூலம் அவரை வேலைக்கு அனுப்பியுள்ளனர்.

துபாயில் 6 மாத ஒப்பந்தப் பணி எனக் கூறி அனுப்பப்பட்ட அவர், அங்கு பணியில் சேர்ந்த ஒரே வாரத்திலேயே ஈரானுக்கு மாற்றப்பட்டு சரக்குக் கப்பலில் பணியமர்த்தப்பட்டுள்ளார். கப்பல் மாயமாகி 6 மாதங்களுக்கும் மேலாகியும் நவீன் குமார் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் மூழ்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்தும் எந்தவித தெளிவான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என நவீன் குமாரின் தாய் பாண்டிச்செல்வி வேதனையுடன் தெரிவித்தார்.

ஒருபுறம் மகனின் நிலை தெரியாத தவிப்பு, மறுபுறம் கல்விக்கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி எனப் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ வழியின்றி தவித்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து தன் மகனை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

X