125 நாட்கள் கிராமபுற வேலை உறுதி திட்டம் இன்று முதல் அமல்

மொத்த செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை தமிழக அரசும் ஏற்கும்
125 நாட்கள் கிராமபுற வேலை உறுதி  திட்டம் இன்று முதல் அமல்
Published on

கிராம வேலை உறுதி திட்டம்:

மத்திய அரசு நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாக 'விக்சித் பாரத் கியாரண்டி பார் ரோஜ்கர் அண்ட் ஆஜீவிகா மிஷன்' (அ) 'விபி-ஜி ராம் ஜி' என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறது.

இந்த திட்டம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் "வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்" என்ற பெயரில் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை உத்தரவாதம் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வேலை கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வேலை வழங்கப்படாவிட்டால், வேலை இழப்பு உதவித்தொகை வழங்கப்படும்.

முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலியின் குறைந்தபட்சம் நான்கில் ஒரு பங்கும், அதன்பிறகு அறிவிக்கப்பட்ட கூலியின் குறைந்தபட்சம் பாதியும் வேலை இழப்பு உதவித்தொகையாக வழங்கப்படும்.

15 நாட்களுக்குள் கூலி:

வேலை செய்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் அல்லது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், 16-வது நாளிலிருந்து நிலுவைத் தொகைக்கு நாளொன்றுக்கு 0.05 சதவீதம் வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

திட்டத்தில் பங்கேற்க விரும்பும் குடும்பங்கள் கிராம பஞ்சாயத்தில் பதிவு செய்து வேலை உறுதி அட்டையைப் பெற வேண்டும். இந்த அட்டை 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். அட்டையின் செல்லுபடியாகும் காலம் 3 ஆண்டுகள். அதன் பின்னர் புதுப்பிக்கப்படும்.

தனியாக வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பழங்குடியினர், விடுதலையான கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு சிறப்பு வேலை அட்டை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் வேலை பெறுவோரில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்க வேண்டும். தனித்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் கிராம சபை ஒப்புதலுடன் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

கூடுதலாக 10 சதவீத கூலி:

எந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கிராம மக்களின் தேவைகளின் அடிப்படையில் கிராம சபையே தீர்மானிக்கும். இந்த திட்டத்தின் மிக முக்கியமாக விதைப்பு மற்றும் அறுவடை போன்ற உச்சகட்ட விவசாய காலங்களில் ஆண்டுக்கு மொத்தம் 60 நாட்கள் வரை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது.

விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முடிந்தவரை தான் வசிக்கும் கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வேலை வழங்கப்படும். 5 கிலோமீட்டருக்கு வெளியே வேலை வழங்கப்பட்டால், கூடுதலாக 10 சதவீத கூலி வழங்கப்படும்.

வேலைக்கு வருபவர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். பணிகள் அனைத்தும் ஜியோ-டேக்கிங் மற்றும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் திட்டமிடல், கண்காணிப்பு, தணிக்கை மற்றும் முறைகேடு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெண் தொழிலாளி:

வேலை நடைபெறும் இடங்களில் குடிநீர், ஓய்வெடுக்க நிழல் வசதி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுடன் பெண்கள் வேலைக்கு வந்தால், 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களை கவனிப்பதற்காக ஒரு பெண் தொழிலாளி நியமிக்கப்பட்டு அவருக்கும் கூலி வழங்கப்படும்.

வேலை செய்யும் போது காயமடைந்தால் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், சிகிச்சை, மருந்து, தங்குமிடம் மற்றும் தினசரி உதவித்தொகையும் வழங்கப்படும்.

உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், அரசு அறிவிக்கும் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளும் 6 மாதங்களுக்கு ஒருமுறை சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்படும். வருகைப் பதிவேடு, செலவுக் கணக்குகள், புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டம் மத்திய–மாநில இணைத் திட்டமாக செயல்படுத்தப்படும். மொத்த செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை தமிழக அரசும் ஏற்கும். வேலை இழப்பு உதவித்தொகை மற்றும் கூலி தாமத இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசே வழங்கும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com