

பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நாளை முதல் பக்தர்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி முருகன் கோவில் ரோப் காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் ரோப் காரின் அனைத்து பாகங்களும் கழற்றப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இதில், புதிய சாப்ட் பொருத்த வேண்டும் என்று பொறியியல் வல்லுனர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து கொல்கத்தாவில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான புதிய சாப்ட்டும், ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய கியர் பாக்சும் வாங்கப்பட்டு, ரோப் கார் எந்திரங்கள் சரிசெய்யப்பட்டன. மேலும் கரூரில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 10 புதிய ரோப் கார் பெட்டிகள் வாங்கப்பட்டு, அவற்றுடன் தேவையான அனைத்து பாகங்களும் பொருத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதற்கிடையே பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோப் காரில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது பெட்டிகளில் தலா 250 கிலோ கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடந்தது. இதனை வல்லுனர்கள் ஆய்வு செய்து திருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நாளை முதல் பக்தர்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரோப் கார் சேவை மீண்டும் தொடங்குவதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.