

மருமகனுடன் சேர்ந்த மாமியார் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பேட்டை ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்திக். ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜய லட்சுமி.
இந்த நிலையில், கடந்த 23-ந்தேதி வழக்கம்போல் இருவரும் வீட்டை பூட்டி விட்டு அவரவர் வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர், மதியம் வீடு திரும்பிய போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2½ லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர், இதுகுறித்து கார்த்திக் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அழகேசன் 2 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு ஆணும், பெண்ணும் சென்றது பதிவாகி இருந்தது.
பின்னர், அவர்கள் குறித்து விசாரிக்கையில் அந்த பெண் வங்காளதேசத்தை சேர்ந்த ஹானா பேகம் (வயது 59) என்பதும், அந்த ஆண் சென்னை சூளைமேட்டை சேர்ந்த குணசேகரன் (40) என்பதும், அவர் ஹானா பேகத்தின் மருமகன் என்பதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, இருவரையும் பிடித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில் வங்காளதேசத்தை சேர்ந்த ஹானா பேகத்தின் மகளுடன் குணசேகரனுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணத்திற்கு பிறகு தனது மகள்- மருமகனை வங்காள தேசத்துக்கு அழைத்து செல்ல ஹானா பேகம் முயன்று உள்ளார். அவ்வாறு செல்வதற்கு அவர்களுக்கு நிறைய பணத் தேவை இருந்தது. இதனால் அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு, பணம் சம்பாதிக்கலாம் என திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் மாமியார்- மருமகன் இருவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட கும்பகோணத்தை தேர்வு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து கும்பகோணம் வந்து பல பகுதிகளில் சுற்றி உள்ளனர். அப்போது கும்பகோணம் அருகே புளியம்பேட்டை பகுதியில் கார்த்திக் வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்டு உள்ளனர். பின்னர், பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், குணசேகரன் இதேப்போல் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் போலீசார் அறிந்தனர். இதனையடுத்து அரியானா தப்பி விடாமல் தமிழ்நாட்டிலேயே மாமியார் ஹானா பேகம்- மருமகன் குணசேகரன் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கொள்ளை சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்த திருவிடைமருதூர் போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். மருமகனுடன் சேர்ந்த மாமியார் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.