

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் மட்டும் பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபடி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நேற்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது.
மலையில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை மற்றும் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிஆர்பிஎப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.
மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் மலைக்கு கீழே திரண்டு இருந்தனர். தீபம் ஏற்றப்பட்டபோது அவர்கள் விண் அதிர 'அரோகரா' கோஷம் எழுப்பினர்.
தீபம் ஏற்றியதை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜைகள் செய்து வழிபட்டனர். வீடுகள் முன் சர்க்கரை பொங்கல், புளியோதரை, கேசரி ஆகியவற்றை தீபத்தை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் மட்டும் பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை தீபமேற்ற திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
மேலும், கோவில் நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தீபமேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.