

‘பிக்பாஸ் தமிழ் சீசன் 10’ நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை போட்டியாளர்களை சந்தித்த, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி, தலைமைத்துவத்திற்கான பண்புகள் குறித்து விளக்கியிருந்தார்.
முதலமைச்சர் விஜய்யைத்தான் நடிகர் விஜய் சேதுபதி மறைமுகமாக விமர்சித்திருந்ததாக அவரின் இந்த பேச்சுத் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்டு பெரும் பேசுபொருளானாது.
இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுக்க அவரின் பேச்சு வெறும் நிகழ்ச்சிகானது மட்டுமே என்றும், வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபர் மற்றும் எந்த அமைப்பையும் குறித்தது இல்லை என தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி மன்னிப்புக் கோரவேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் முற்றுகையிடுவோம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதியின் மார்க்கெட் சரிந்ததாலேயே முதலமைச்சர் விஜய் குறித்து இவ்வாறு பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சட்டரீதியாக துணையாக இருப்போம் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.