உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை ரூ.7000 ஆக உயர்வு - முதலமைச்சர் உத்தரவு

மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5000 லிருந்து ரூ.7,000/-ஆக உயர்த்தி தமிழக முதல்வர் விஜய் ஆணையை வெளியிட்டுள்ளார்.
cm vijay
Published on: 

உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5000லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் விஜய் ஆணையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு "வெற்றித் தமிழகம் தொலைநோக்குப் பார்வை" என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000- ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டது.

அதனடிப்படையில், தொழில் துறை அமைச்சர் 25.08.2026 அன்று நடைபெற்ற தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக்கோரிக்கையின்போது "உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்குத் தற்போது வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000- ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

அதன்படி, உப்பளத் தொழிலாளர்கள் மழைக்காலத்தில் உப்புத் தொழிலில் ஈடுபட முடியாத சூழலில் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்-அமைச்சரால் ஆணையிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும். இதன்படி 2026-2027ஆம் ஆண்டில் 23,979 தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள். இதன்மூலம் இந்த ஆண்டிற்கு ஏற்படும் 16.78 கோடி ரூபாய் செலவினை அரசே ஏற்கும்.

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X