15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களின் பதிவு 2035 வரை நீட்டிப்பு- தமிழக அரசு

15 ஆண்டுகளை கடந்தும் இன்னும் பயன்பாட்டில் இருந்து, புதிய வாகனங்களால் மாற்றப்படாமல் இருக்கும் அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை ஆண்டுதோறும் நீட்டிக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on: 
Summary

தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளைக் கடந்தும் பயன்பாட்டில் உள்ள அரசு வாகனங்கள், அரசு போக்குவரத்துக் கழக வாகனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.

நீட்டிப்பு

மத்திய அரசின் விதிகளின்படி, 15 ஆண்டுகளைக் கடந்த அரசு வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கி புதிய வாகனங்களை வாங்க வேண்டும். இதன் காரணமாக, 15 ஆண்டுகளைக் கடந்த பல அரசு வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து, தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு அரசாணைகள் மூலம் பழைய அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை அவ்வப்போது நீட்டித்து வந்தது. கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசு துறைகள், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான 12,000 வாகனங்களின் பதிவு 30.09.2026 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நீட்டிப்பு காலம் 30.09.2026 அன்று நிறைவடையும் நிலையில், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அரசுக்கு பரிந்துரை அளித்தார்.

போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அளித்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் அரசு துறைகள், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான 40,296 வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலம், 2035 ஆம் ஆண்டு வரை படிப்படியாக முடிவடைய உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பதிவு நீட்டிப்பு 30.09.2026 அன்று முடிவடைகிறது.

சான்றிதழ் புதுப்பிப்பு

அதன்படி, தமிழ்நாட்டில் அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான 40,296 வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை 30.09.2027 வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்குத் தேவையான இடங்களில் வாகன வரியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கைமுறையாக வசூலிக்கலாம். மேலும், கைமுறையாக பிட்னெஸ் சர்டிபிகேட் வழங்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சான்றிதழை புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் மேலும் பல அரசு வாகனங்கள் 15 ஆண்டுகளை நிறைவு செய்யும். அவ்வாறு 15 ஆண்டுகளை கடந்தும் இன்னும் பயன்பாட்டில் இருந்து, புதிய வாகனங்களால் மாற்றப்படாமல் இருக்கும் அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை ஆண்டுதோறும் நீட்டிக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து ஆணையங்கள் 15 ஆண்டுகளைக் கடந்த அரசு வாகனங்களின் பதிவை தேவையான நடைமுறைகளுக்கு உட்பட்டு ஆண்டுதோறும் நீட்டிக்கலாம்.

இந்த நீட்டிப்பு, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அல்லது அரசு அமைப்புகள் அந்த வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கி, புதிய வாகனங்களை வாங்கி மாற்றும் வரை வழங்கப்படலாம். எனினும், இந்த வகையில் பதிவு செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதற்கான அதிகபட்ச காலவரம்பு 30.09.2035 என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.

இந்த உத்தரவு அரசு துறைகள், அரசு நிறுவனங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார்பு அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com