

மழையின்றி நீர்வரத்து குறைந்ததால் தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 933 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு கோடை காலத்தில் 20 அடிக்கும் கீழ் சரிந்தது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டது.
அதன்பிறகு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து தற்போது 55.32 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் சரிந்ததால் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அணைக்கு வரத்து 666 கன அடியாக உள்ளது. இதனால் அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று 986 கன அடியில் இருந்து 586 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று பாசனத்திற்கான தண்ணீர் மேலும் குறைக்கப்பட்டு குடிநீர் திட்டங்களுக்காக திறக்கப்படும் தண்ணீருடன் 486 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 2770 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.15 அடியாக உள்ளது. 282 கன அடி நீர் வருகிறது. மழையின்றி நீர்வரத்து குறைந்ததால் தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 933 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் 2856 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.60 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 51 கன அடி நீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 28.70 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. மழை எங்கும் இல்லை.