

பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் அமீர் அகமது, ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லியில் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லி குளக்கரை தெருவில் உள்ளது. இதனை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடுகள், மாட்டு கொட்டகை மற்றும் கடைகள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கோவில் நிலத்தை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் உதவி ஆணையர் சிவஞானம் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் பாலாஜி, செயல் அலுவலர் சிந்துமதி ஆகியோர் மேற்பார்வையில் பூந்தமல்லி வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் 3 ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர். சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டது.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
சுமார் ரூ.10கோடி மதிப்புள்ள 10 ஆயிரம் ச.அடி நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மேலும் அங்கு “கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. முன்னதாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் அமீர் அகமது, ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.