

கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் ரேசன் கடைகளில் தூய்மை மற்றும் சுகாதாரம் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, சில கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் வைக்கப்படும் இடங்கள் போதிய தூய்மையுடனும், சுகாதாரத்துடனும் பராமரிக்கப்படாதது கண்டறியப்பட்டது. மேலும், பொருட்கள் முறையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பு வைக்கப்படாததும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேர கூட்டுறவு ரேசன் கடைகளையும் முழுமையாகச் சுத்தம் செய்து, தொடர்ந்து தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இப்பணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனியாகக் கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் முதுநிலை ஆய்வாளர் ஆகியோரைக் கொண்ட பிரத்யேக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் கடைகளுக்கு நேரில் சென்று கண்காணிப்பார்கள் தூய்மைப் பணி செய்வதற்கு முன்னும், பணி நிறைவடைந்த பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அட்டவணையில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.