

மது போதையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகனை தாயே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகேயுள்ள சாத்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன்-அங்குத்தாய் தம்பதியரின் மகன் கருப்பசாமி (வயது 41). இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் இருந்தனர். இதற்கிடையே கணவரின் குடிப்பழக்கம் காரணமாக அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அவர்களுக்கு 14 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இருந்தபோதிலும் கணவர் குடிப்பழகத்தில் இருந்து திருந்தாததால் மனமுடைந்த கருப்பசாமியின் மனைவி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். தற்போது அவர்களது குழந்தை அவரது பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறது.
கருப்பசாமி கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தார். அதில் கிடைக்கும் சம்பளத்தை குடித்தே அழித்து வந்தார். பலமுறை அவரது தாய் மற்றும் உறவினர்கள் அறிவுரை கூறியும் அதனை தட்டிக்கழித்து வந்துள்ளார். மேலும் தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தாயுடன் தகராறிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் தீபாவளியையொட்டி அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்து வந்த கருப்பசாமி, தனது தாயாரின் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனை அவரது தாய் கடுமையாக கண்டித்துள்ளார்.
நேற்றும் போதையில் வந்த கருப்பசாமிக்கும், அவரது தாய்க்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அங்குத்தாய் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து மகன் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கினார். கருப்பசாமியின் தலையில் அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே விழுந்து ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கொலையுண்ட கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடத்திய போலீசார் மகனை அடித்துக் கொன்ற அவரது தாய் அங்குத்தாயை கைது செய்தனர். ஏற்கனவே போதை பழக்கத்தால் தாய் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் கொலை செய்யப்பட்டு அவரது 14 வயது மகள் ஆதரவின்றி தவித்து வருகிறார். மது போதையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகனை தாயே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.