

நிலத்தகராறில் நீண்ட நாட்களாக இருந்த மோதல் இறுதியில் கொலையில் முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சிக்கல் பகுதியை அடுத்த சிறைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆர்தர் (வயது 55). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், கடலாடி வட்டார தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்க முன்னாள் தலைவருமான இவர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கந்தன் ஆகியோர் நேற்று இரவு சிக்கல் அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதே ஊரைச்சேர்ந்த சகேயு (32) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆர்தரை நோக்கி பாய்ந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஆர்தர் மற்றும் கந்தன் ஆகியோர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இருந்தபோதிலும் ஆர்தரை விடாமல் துரத்திச் சென்ற சகேயு, அவரை சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் முகம், நெஞ்சில் பலத்த காயமடைந்த ஆர்தர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
முன்னதாக தடுக்க முயன்ற கந்தனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் படுகாயங்களோடு மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து விரைந்து வந்த சிக்கல் போலீசார் உடலை கைப்பற்ற முயன்ற போது உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் நள்ளிரவில் ராமேசுவரம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குற்றவாளி கண்டுபிடித்து கைது செய்யப்படுவார் என உறுதி அளித்ததை தொடர்ந்து தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் நிபுணர்கள் வந்து அந்த பகுதி முழுவதும் தடயங்களை சேகரித்தனர். மேலும் கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதையடுத்து உயிரிழந்த ஆர்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் சிறைக்குளம் கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையாளி சகேயுவை இன்று அதிகாலையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறைக்குளம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தை சகேயுவின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை கூறியும் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து அவர்கள் வெளியேறவில்லை.
இதையடுத்து ஆர்தர் இந்த பிரச்சினையில் தலையிட்டு, புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து கலெக்டரிடம் அனு அளித்துள்ளார்.
அதன்பேரில் நடவடிக்கை எடுத்து புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக ஆர்தருக்கும், சகேயு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி அவர்களுக்குள் மோதல்களும் இருந்து வந்தது. இந்த சம்பவத்தில் பழிவாங்கும் நோக்கத்துடன் நேற்று இரவு சகேயு, ஆர்தலை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக சிக்கல் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். நிலத்தகராறில் நீண்ட நாட்களாக இருந்த மோதல் இறுதியில் கொலையில் முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.