

போக்குவரத்து போலீசார் ரெயில்வே சுரங்கப் பாலத்தின் பகுதியில் போக்குவரத்தைத் தடை செய்து, வாகனங்களை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் லேசான சாரல் மழை சிறிது நேரம் பெய்தது. அதன் பின்னர் மாலை வரை வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், இரவில் பலத்த இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை அதிகாலை வரை நீடித்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக, கோவில்பட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. சில சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சென்றது.
வெளுத்து வாங்கிய மழையின் காரணமாக, இளையரசனேந்தல் சாலை ரெயில்வே சுரங்கப் பாலத்தில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். வாகனங்களுக்குள் மழைநீர் புகுந்ததால், சில வாகனங்களில் பழுதும் ஏற்பட்டது.
இதையடுத்து, போக்குவரத்து போலீசார் ரெயில்வே சுரங்கப் பாலத்தின் பகுதியில் போக்குவரத்தைத் தடை செய்து, வாகனங்களை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.