

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
முன்னதாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.