

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதனிடையே, இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், 10 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.