

மீன்வாங்க கூட்டம் குறைவாக இருந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
காசிமேடு மீன் மார்க்கெட்டில் வார இறுதி நாட்களில் மீன் விற்பனை களை கட்டும். தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி உள்ள நிலையில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று எதிர்பார்த்த அளவு மீன் விற்பனை இல்லை. மீன்வாங்க கூட்டம் குறைவாக இருந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுகம் இன்று களை இழந்து காணப்பட்டது.
எனினும் சிறிய வகை, பெரிய வகை மீன்கள் வரத்து வழக்கம்போல் அதிகமாகவே விற்பனைக்கு வந்து இருந்தன. ஆனாலும் மீன்களை வாங்குவதற்கு மீன் பிரியர்கள், சில்லரை வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
உணவகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் மொத்த வியாபாரிகள் மீன்களை குறைந்த விலையில் அள்ளி சென்றனர்.
அதிகாலை முதலே மீன் வாங்க பெரிய அளவில் கூட்டம் இல்லாததால் காசிமேடு சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. மீன் விலை சற்று குறைவாக இருந்தன. வஞ்சிரம் கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கொடுவா ரூ.600, சங்கரா ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.
காசிமேட்டில் மீன் விலை (கிலோவில்) வருமாறு:-
கொடுவா-ரூ.600
தேங்காய் பாறை-ரூ.500
ஷீலா-ரூ.400
பால் சுறா-ரூ.400
சங்கரா-ரூ.300
பாறை-ரூ.300
இறால்-ரூ.300
நண்டு-ரூ.300
நவரை-ரூ.300
பண்ணா-ரூ.300
காணங்கத்தை-ரூ.300
கடுமா-ரூ.300
நெத்திலி-ரூ.200.
இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலனோர் அசைவ உணவை தவிர்ப்பார்கள். இதனால் மீன் விற்பனை குறைந்து உள்ளது. புரட்டாசி மாதம் முழுவதும் இதே போல் தான் இருக்கும். மீன்விலை குறைந்து உள்ளது என்றனர்.
திருவள்ளூர் மீன்மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சி கடையில் விற்பனை மந்தமாக இருந்தது. பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதனால் மீன்கள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை போல் ஆடு, கோழி இறைச்சி விற்பனை கடைகளும் பொது மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடின. இதனால் இறைச்சி வியாபாரிகள் கவலை அடைந்தனர்.