தாய்நாட்டு விடுதலைக்காக தன்னலமின்றி போராடிய பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! - முதலமைச்சர் விஜய்

தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.
CM Vijay - Puli thevar
Published on

மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெற்கட்டும்செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரராகப் பூலித்தேவன் விளங்கினார்.

இவரது காலம் தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறையின் வீரம் செறிந்த காலகட்டமாகப் போற்றப்படுகிறது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தவர்.

ஆற்காடு நவாப் முகமது அலியும் அவனுக்கு ஆதரவளித்த ஆங்கிலேயக் கம்பெனியும் பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முயன்றபோது, பூலித்தேவன் திறை (வரி) செலுத்த மறுத்துவிட்டார்.

ஆங்கிலேயர்களை எதிர்க்கக் கருதி, பிற பாளையக்காரர்களான மேற்குப் பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஒரு வலிமையான கூட்டமைப்பை உருவாக்கினார். இதில் மாவீரன் ஒண்டிவீரன் போன்ற தளபதிகள் இவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.

பூலித்தேவனை அடக்க பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட முகமது யூசுப்கான் பலமுறை நெற்கட்டும் செவலை முற்றுகையிட்டார். ஆரம்பத்தில் பூலித்தேவனின் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் கான்சாஹிப் திணறினார்.

நீண்ட போர்களுக்குப் பிறகு, ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்கள் மற்றும் பீரங்கிப் படைகளின் உதவியோடு 1761-இல் நெற்கட்டும்செவல் கோட்டையைக் கான்சாஹிப் கைப்பற்றினார்.

கோட்டையை இழந்தாலும் பூலித்தேவன் சோர்வடையாமல், மறைவிடங்களில் இருந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து முதன்முதலாகப் போராடிய மாவீரர்களில் பூலித்தேவன் குறிப்பிடத்தக்கவர்.

இந்நிலையில் மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதாகவே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளில், அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன்.

அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது இறுதி மூச்சுவரை அஞ்சாது போராடிய அவரது வீரமும், தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.

தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com