கிராம சபை கூட்டத்தில் கருப்பு பேட்ச் அணிந்து தரையில் படுத்து பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் கருப்பு பேட்ச் அணிந்து தரையில் படுத்து பொதுமக்கள் போராட்டம்
Published on: 
Summary

கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தரையில் படுத்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அடுத்த சிப்காட் பகுதிக்குட்பட்ட நொச்சிக்காடு, குடிகாடு மற்றும் தியாகவல்லி ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் பகுதியை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கிராம சபை கூட்டம்

அரசின் இந்த திட்டத்திற்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சிப்காட் விரிவாக்கம் செய்யப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடையும் என்றும் தெரிவிக்கும் பொதுமக்கள், இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

கருப்பு பேட்ச்

இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தியாகவல்லி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அப்பகுதி பொதுமக்கள், சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பேட்ச் அணிந்து வந்திருந்தனர். மேலும் "சிப்காட் விரிவாக்கம் வேண்டாம்" என திட்டவட்டமாக முழக்கமிட்டனர்.

போராட்டம்

கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோதே, திடீரென பொதுமக்கள் சிலர் அங்குள்ள தரையில் படுத்துக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தரையில் படுத்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com